
ஹிட்லர் ஜெரூசலத்தின் தலமை முல்லாவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, ஹிட்லரின் நாஜிப்படைகளுக்கு முல்லா நாஜி சலியூட் அடிக்கும் படத்துடன் திரைப்படம் துவங்குகிறது. பிண்ணனியில் பிரஞ்சு மொழி ரேடியோவில் "அரபிகள் பிரஞ்சு காரர்களுடன் இணைந்து யூதர்களால் அடிமை வாழ்க்கைக்குத் தள்ளப்பட்டுள்ளனர், நாஜிக்களுக்கு உதவுவதால் துனீசியா மீண்டும் அரபிகள் கையில் வரும், சுதந்திரம் கிடைக்கும்" என்று பிரச்சாரம் ஒலிக்கிறது.
படத்தில் முஸ்லீம் பெண்ணின் பெயர் நூர், யூதப்பெண்ணின் பெயர் மிரியம், நூருக்கு அவனது மாமா பையண் காலிதுக்கு நிச்சயம் செய்கிறார்கள். நூர் திருமணம் நடக்கவேண்டுமென்றால் காலிதுக்கு வேலை கிடைக்கவேண்டும் என்று நூரின் தந்தை கண்டிஷன் போடுகிறார். காலித் வேறு வழியில்லாமல் நாஜிப்படைகளுக்கு உதவும் வேலையில் இணைகிறான்.
மிரியம் தனது தாயுடன் முதல் மாடி போர்ஷனில் இருக்கிறார். தையல் தொழில் செய்து பிழைப்பு நடத்துகிறார்கள். ஒரு நாள் ரேடியோவில் 20000 பிராங்குகள் கொடுத்தால் யூதர்களை உயிருடன் வாழ விடுவதாக அறிவிப்பு வருகிறது. மிரியமின் தாய் ஒரு பணக்கார நடுத்தர வயது யூத டாக்டரை சந்திக்கிறார். அவர் பணம் கொடுத்து உதவுவதாகச் சொல்கிறார். ஆனால் பதிலுக்கு மிரியமை தனக்கு மணமுடித்துத் தரவேண்டும் என்று கேட்கிறார். மிரியமின் தாயும் இந்தப் பொருந்தாத் திருமணத்திற்கு வேறு வழியில்லாமல் ஒத்துக்கொள்கிறார். மிரியமையும் ஒத்துக்கொள்ள வைக்கிறார். அவர்கள் திருமணமும் நடக்கிறது. நாஜிப்படைகள் காலிதுடன் மிரியம் வீட்டிற்கு வந்து மிரியமின் தாயை மிரட்டிச் செல்கின்றனர். அதை மிரியம் பார்த்து நூரிடன் சொல்ல நட்பாக இருந்த இருவரும் பிரிகின்றனர்.
இந்த இரு பதின்ம வயதுப்பெண்களின் திருமணத்தால் இவர்களுக்குள் இருக்கும் நட்பு எவ்வாறு பாதிப்படைகிறது, பிரிந்த இருவரும் இணைகிறார்களா இல்லையா என்பது தான் மீதி கதை.
துனீசியா வாழ்கை:
நூரின் நிச்சயதார்த்தத்தில் ஆண்கள் எல்லாம் மேல் மாடியில் (belly dancer) குலுக்கு நடன அழகி ஆடவைத்து கிட்டத்தட்ட குடும்ப பேச்சலர்ஸ் பார்டியாக இருக்கிறது. கீழே பெண்கள் ஆடு வெட்டி சமைக்கும் முன் அதன் விரைப்பையை இடுப்புக்குக் கீழ் கட்டிக்கொண்டு ஒரு நடுத்தர வயதுப்பெண் ஆட மற்றவர்கள் சிரித்து மகிழ்கிறார்கள்.
Turkish bath எனப்படும் பொதுக் குளியலறையில் பெண்கள் ஆடையின்றி குழிப்பது போன்ற வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய தரைகடல் பகுதி மக்களுக்கே உரித்தான கலாச்சாரத்தை காட்டுகிறார்கள். ஒரு காட்சியில் நாஜிக்கள் இந்தப் பொதுக் குளியலறைக்கு வந்து யூதப்பெண்களை அள்ளிச்செல்லும் போது நூர் "லாஹிலாஹ இல்லல்லா, முஹம்மது ரசூலல்லா" என்று சொல்லச் சொல்லி மிரியம் சொல்ல அவளையும் முஸ்லீம் என்று விட்டுவிடுகிறார்கள்.
படத்தில் பிரஞ்சு பிரதான மொழியாகப் பேசப்பட்டாலும், ஜெர்மன், அரபி மொழிகள் அதிகம் பேசப்படுகின்றன. சப்டைடில் இல்லாமல் பார்க்கவே முடியாது. கரின் அல்போ எழுதி இயக்கியுள்ளார்.
2009 palm spring film festival ல் திரையிடப்பட்ட படம்.