21.9.2008 வாரமலர் திண்ணை பகுதியில் அவர் எப்பேற்பட்ட ஜனநாயகவாதி என்று அவரது உற்ற தோழர் கோவை அய்யாமுத்து எழுதியதாக நடுத்தெரு நாராயணன் எழுதியுள்ளார்.
படித்துத் தெளிந்து கொள்ளவும்.
திண்ணை! - நடுத்தெரு நாராயணன்
ஈ.வெ.ரா.,வுடன் இருந்தவர் கோவை அய்யாமுத்து. காங்கிரஸ் கட்சியிலும், பிறகு ஈ.வெ.ரா.,வின் சுயமரியாதை இயக்கத்திலும் பணியாற்றியவர். ஈ.வெ.ரா.,வின், "குடியரசு' பத்திரிகையின் ஆசிரியர். ராஜாஜி ஆதரவாளர். காந்தியுடன் நெருங்கிப் பழகியவர். மிகச் சிறந்த நிர்வாகி என்று புகழ்பெற்றவர். ஈ.வெ.ரா., உயிருடன் இருந்த காலத்திலேயே இவர் திருலோக சீதாராமின், "சிவாஜி' பத்திரிகையில் (1970) எழுதிய கட்டுரை இப்படித் துவங்குகிறது...
என் மதிப்புக்குரிய நண்பர் ஈ.வெ.ரா., செல்வத்திடமும், செல்வத்தை வைத்திருக்கும் செல்வரிடத்தும் மட்டற்ற மதிப்பு உடையவர். அவரிடத்தும் செல்வம் ஓரளவு குவிந்திருக்கிறது. தாம் ஆண்டுதோறும் ஈரோடு நகராட்சி மன்றத்துக்கு ஐந்தாயிரமோ, அதற்கு அதிகமாகவோ சொத்து வரி செலுத்தி வருவதாகப் பெருமிதத்துடன் சில ஆண்டுகளுக்கு முன்பு சொன்னார். தாம் செல்வந்தர் என்பதால் தம்மைப் பிறர் மதிக்க வேண்டும், மதிப்பாக நடத்த வேண்டும் என்று எப்போதும் எதிர்பார்க்கிறார். செல்வம் இல்லாதவர்கள் கூலி வேலை செய்து பிழைப்பதற்குத்தான் தகுதியுடையவர்கள் என்று கருதுவார். அவர்களை, அன்னக்காவடிகள், தகர போணிகள் என்றும், "கீழே பூமியும், மேலே ஆகாயமும் அன்றி வேறெதுவும் இல்லாதவர்!' என்றும் பரிகாசமாகச் சொல்வார்.
"இவனுக்கு என்ன தகுதி? அவனுக்கு என்ன யோக்கியதை?' என்று பணத்தைக் கொண்டே மனிதனை எடை போட்டுப் பார்ப்பார்.
பனகல், பொப்பிலி, ராஜா சர்.அண்ணாமலை, சவுந்தர பாண்டியன், ஆர்.கே.சண்முகம், ஜமால் முகமது போன்ற செல்வந்தர்கள் தான் ஆட்சி பீடத்தில் அமர அருகதை உடையவர்கள் என்று கருதுவார். யாதுமற்ற அன்னக் காவடிகள் அரியாசனம் ஏறி, அதிகாரம் செய்ய வாய்ப்பளிக்கும், "ஜனநாயகம்' என்ற சனியனை கண்ணால் காண்பதும், வாயால் சொல்வதும் ஈ.வெ.ரா.,வுக்கு துளி கூடப் பிடிக்காது. உலகில் ஒரு கடவுளைக் கூட ஈ.வெ.ரா., ஏற்றுக் கொள்வாரேயொழிய அன்னக் காவடிகளை அரசர்களாக்கும் இந்த பெரும் சனியனாகிய ஜனநாயகத்தை அவர் இப்பிறவியிலும், மற்றொரு பிறவியிலும் நிச்சயமாக, முடிவாக, தீர்மானமாக ஏற்றுக் கொள்ளவே மாட்டார். ஏதோ வேண்டா வெறுப்பாகக் காமராஜரும், அண்ணாதுரையும், கருணாநிதியும் ஆட்சிப் பீடத்திலிருந்து அதிகாரம் செய்த காரணத்தால், அவர்களை அண்டுவதால் தமக்கு மரியாதைகளும், மலர் மாலைகளும், சிறப்பு விழாக்களும், பிற சிறப்புகளும் கிடைக்கின்றன என்ற காரணத்தால், அவர்களைப் பச்சைத் தமிழன், உண்மைத் தமிழன் என்றும், "கலைஞர் கருணாநிதி' என்றும் தம்முடைய, "பரிவாரங்கள்' என்றும் பரிந்துரைகள் வழங்கிப் பாராட்டுதல் தெரிவித்தார். ஆனால், அவருடைய அடித்தளத்தை சோதித்துப் பார்த்தால், "உம்... என்னிடம் மாதம் முப்பது ரூபாய்க்கு இருந்த பயல், இப்போது மந்திரியாகி விட்டான்! மந்திரியாவதற்கு அவனுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?' என்ற பொருமல் பெருமளவில் காணப்படும். தமிழ்நாட்டில் இன்று தம்மை மிஞ்சிய அறிவாளி யாரும் இல்லை என்றும், தம்மைத் தவிர்த்து மற்ற எல்லாரும் முட்டாள்கள் என்றும் வாழும் ஈ.வெ.ரா.,வின் மனநிலையை இது வரை கணித்தோம். இனி...
இப்படி எழுதியுள்ளார் கோவை அய்யாமுத்து.