Little children, இந்தப் படத்தை நான் நவம்பர் 2006 லேயே பார்க்கவேண்டும் என்று நினைத்து கடைசியில் சென்ற வாரம் தான் வாய்ப்பு கிடைத்தது. டாட் ஃபீல்ட் என்ற இயக்குனரால் எடுக்கப்பட்ட படம். இந்த டாட் ஃபீல்ட் ஒரு நடிகரும் கூட.
படத்தைப் பார்த்த உடன் எற்பட்டது சலிப்பு தான். ஓவர் எக்ஸ்பெக்ட் செய்துவிட்டோமோ என்று தோன்றியது. திருமணமான இளவயது தம்பதியினர் இருவருக்குள் ஏற்படும் உறவைப் பற்றிய கதை. அத்தகய உறவை தகாத உறவு என்று பெயரிட்டு அழைப்பார்கள். இதில் எந்த பொயெடிக் ஜஸ்டிஸோ இல்லை தகாத உறவை ஞாயப்படுத்தும் முயற்சிகளோ இயக்குனர் எடுக்காமல் கொஞ்சம் மெச்சூராகவே கதையை நகர்த்தியிருப்பது ஆறுதலான விஷயம்.
கதை:
சாரா ஒரு குழந்தையின் தாய். கணவர் வேலையில் பிசி. ப்ராட் ஒரு குழந்தைக்கு அப்பா. வேலை இல்லை. அடுத்த முறை தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் வக்கீலாக முடியும் என்ற நிலை. மனைவி சம்பாத்தியத்தில் வாழும் மனிதர். வீட்டையும் குழந்தையையும் பார்த்துக் கொள்கிறார். மனைவி ஒரு டாக்குமெண்டரி படம் இயக்குபவர். வேலையில் அனியாய பிசி. ரோன்னி என்பவர் ஒரு பரோலில் வெளிவந்திருக்கும் குற்றவாளி. அவனது குற்றம், பொது இடத்தில் குழந்தைகளின் முன்னிலையில் பிறந்த மேனியாக காட்சி அளித்தது. லேரி ஒரு அவசரக்குடுக்கை எக்ஸ் போலீஸ். வேலையிலிருந்து வாலண்டரி ரிட்டையர்மெண்ட் கொடுக்கப்பட்டவர். அவரது தற்போதைய தொழில் ரோன்னியை மறுபடியும் ஜெயிலுக்கு அனுப்புவது. ரோன்னியும், லேரியும் ஒரு பக்கம் சண்டை ஆரம்பிக்கிறது என்றால், சாராவுக்கும் பிராடுக்கும் கள்ள உறவு மலர்கிறது. ரோன்னியின் தாய் தன் மகனுக்கு ஒரு கர்ள் ஃபிரண்ட் இருந்தால் அவன் தவறான வழிக்குச் செல்ல மாட்டான் என்று நம்பிக்கை. சாராவின் கணவனுக்கோ இண்டர்நெட்டில் இருக்கும் ஆபாசம் பிடிக்கும். இவர்கள் அனைவரின் வாழ்க்கை எவ்வாறு பின்னிப் பிணைந்துள்ளது ? சாராவின் அட்வெஞ்சர் எப்படி முடிவுக்கு வருகிறது. பிராட் ஒரு வக்கீலாக தேர்ச்சி பெருவானா ? இதெல்லாம் தான் கதை.
மதாம் போவரே என்ற ஃபிரஞ்சு மொழி நாவல் குஸ்தாவ் ஃப்ளாவ்பர்ட் எழுதியது. அது 19ம் நூற்றாண்டு முடிவில் சக்கை போடு போட்டு விற்ற நாவல். ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டது. அதில் மேடம் போவரே டாக்டரை திருமணம் செய்து வீட்டில் வாழும் பெண். தனது காதல் இல்லாத வாழ்க்கையில் ஏற்றம் வேண்டி தகாத உறவுகளை ஏற்படுத்திக் கொள்கிறார். ஐரோப்பிய சிந்தனைகளில் தகாத உறவுகள் முக்கியத்துவம் பெருவது இந்த நாவலில் தான் ஆரம்பமாகிறது என்று பலர் கருதுகின்றனர். அந்த வரிசையில் இந்தப் படத்தையும் நிறுத்த முயற்சித்திருக்கிறார் இயக்குனர். படத்திலும் இந்த நாவலை பற்றி விவாதங்கள் எழுகின்றன. சாரா வை இந்த போவரே போல் காட்ட முயற்சித்திருக்கிறார்.
2007 ஆஸ்கார் விருதுக்காக பல துறைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது இந்தப்படம்.