'நான் யார் என்று இந்த வெங்காயத்தை வைத்துக் கொண்டு எப்படிக் கண்டுபிடிப்பது?'
'மகனே நீ யார் என்று கேட்டால் என்ன சொல்வாய்?'
'நான் இன்னாரின் மகன்; இந்த ஊரில் இந்த இடத்தில் இப்படி இருக்கிறேன் என்று சொல்வேன்.'
'அது மேல்தோலுடன் கூடிய உரிக்காத வெங்காயம். உண்மையில் நீ அதுதானா? இந்தஉடம்பு, இது இன்னாரின் மகன் என்று சொல்வது எது? அப்படியானால் அந்த உடம்பா நீ? என் கை, என் கால் என்று கை கால் இழந்தாலும் சொல்வது எது? அது உடம்பைக் கடந்த வேறு ஒன்று அல்லவா?அதைக் கண்டுபிடிக்கும் வரை வெங்காயத்தின் அடுக்குகளை ஒவ்வொன்றாய் உரித்துக் கொண்டு வா!'
தலைவருக்குக் குழப்பமாய் இருந்தது.
'இதைக் கண்டுபிடிக்க எவ்வளவு நாளாகும்? நான் வேறு வேலை செய்ய வேண்டாமா?'
'நீ இதற்காக அதிக நேரம் செலவழிக்க வேண்டாம் மகனே. தினசரி விடிகாலையில்அமைதியாக ஐந்து நிமிடம் அமர்ந்து யோசித்தால் போதும். இதற்கு விடையை நீ நிச்சயம் கண்டுபிடிப்பாய். இந்த ஊரையே நல்வழிப் படுத்துவாய்'
- என்று சொல்லித் தலைவரின் தலையில் கை வைத்து ஆசி வழங்கினார் சித்தர்.
இருவரும் குகையை விட்டு வெளியே வந்தனர்.
'தலைவர் இவர் இனி உங்களை நல்வழிப்படுத்துவார்' என்று ஊர்மக்களிடம் சொல்லிவிட்டுத் தன்வழி நடந்தார் சித்தர்.
ஆத்திகர்களுக்கோ ஏமாற்றம்; அயோக்கியர்களுக்கு ஆதரவான இந்தத் தலைவன் நம்மைநல்வழிப் படுத்துவானா என்று.
நாத்திகர்களுக்கோ கொண்டாட்டம். 'பாருய்யா இந்தச் சாமியாரையே ஜெயிச்சு ஊரைவிட்டே அனுப்பிட்டாரு நம்ம தலைவரு' என்று எக்காளமிட்டனர்.
தலைவர் அமைதியாக வீடு நோக்கி நடந்தார். அடிப்பொடிகள் கூடவே சென்றன.
தலைவர் திண்ணையில் அமர்ந்து கையில் வெங்காயத்தை வைத்துக் கொண்டு எதுவும்பேசாமல் யோசனையில் ஆழ்ந்ததைப் பார்த்ததும் அவர்களுக்குக் கிலி பிடித்துக் கொண்டது.
அவரிடம் தைரியமாய்ப் பேசும் அவரின் வலக்கை போன்றவன் குரல் கொடுத்தான்.
'என்ன தலைவா, அந்த ஆரியப் பார்ப்பு உங்களை ஏதாச்சும் மயக்கிட்டானா?'
இது ஆத்திகர்களைப் பார்த்து தலைவர் வழக்கமாய்ப் பேசும் வசனம்தான்.ஆனாலும் இப்போது தலைவருக்கு இதைக் கேட்டதுமே அருவருப்பாய் இருந்தது.
'டேய் அடங்குங்கடா! எதுக்கெடுத்தாலும் ஆரியன் பூரியன்னுக்கிட்டு. அந்தச்சாமியாரு நம்பாளுதாண்டா. போங்கடா எல்லாரும்!' என்றவர் கத்தக் கண்டு
கலங்கிக் கலைந்து போனது அவர் கோஷ்டி.
அடுத்தநாள் விடியுமுன்னர் எழுந்து நிதானமாய் யோசிக்க ஆரம்பித்தார் தலைவர்.
'என் உடல் என்று சொல்வது எது? என் வீடு இடிந்து போனதென்றால் அது என் வீடல்ல, என் மனைவி என்னை விட்டுப் போய் விட்டால் என் மனைவி அல்ல என்று சொல்வது சரி. என் உடல் என்பது நானேதானே...'
சித்தர் சொன்னது ஞாபகம் வந்தது.
'என் கை, என் கால் என்று சொல்வது...'
'நாளை எவனாவது என் விரோதி என் கையை வெட்டிவிட்டுப் போய்விட்டால்...'
கையைப் பார்த்துக் கொண்டார்.
'இந்தக் கையே நாளை துண்டாகி விழுந்துவிட்டால் அது நானில்லாமல் போகும்.
அப்போது இந்தக் கை நானில்லை. அப்புறம் இந்த உடலில் நான் நான் என்று
சொல்வதுதான் எது?'
'மூளை மட்டுமா? அது மட்டும் நானாகி விடுமா? அது தனியே யோசிக்குமா?'
'இல்லை, சாமியார் சொல்வது போல் அது உடலாய் இருக்க வாய்ப்பில்லை..!'
வெங்காயத்தின் மேல்தோலைப் பிய்த்தெறிந்தார்.
மேலே சிந்திக்கத் தோன்றவில்லை.
அடுத்த நாள் விடிகாலை அவர் கண்ட கனவொன்று அவரை எழுப்பியது. மீண்டும் சிந்தனையில் ஆழ்த்தியது.
'கனவில் நான் அனுபவித்த இன்பத்தை உண்மையில் அனுபவித்தது எது? இந்த உடலா அல்லது வேறொன்றா?'
வெங்காயத்தின் அடுத்த அடுக்கும் உறிந்தது.
தொடர்ந்து வந்த நாட்களில் ஐந்து நிமிடம் பத்து நிமிடமாகி மணிக்கணக்கில் நீண்டது. தலைவர் தன் ஜமாவைச் சந்திப்பதையே நிறுத்தி விட்டார்.
வெளியே ஏகக் கலவரம்.
தலைவரை எதிர்த்துக் கேள்வி கேட்ட வலக்கையின் பின்னால் நாத்திகக் கூட்டம் ஒன்று திரண்டிருந்தது இப்போது. இவன் இன்னும் முரடன். தலைவரை எதிர்த்து அறிக்கைக்கு மேல் அறிக்கையாக விட்டுக் கொண்டிருந்தான்.
ஆத்திகக் கோஷ்டியைச் சேர்ந்த அயோக்கியன் ஒருவன், சித்தர் நட்ட கல்லைச் சுற்றி பெரிதாய் நிலத்தை வளைத்து வேலி போட்டு, அந்தக் கல்லுக்கு ஒரு புடவையையும் கட்டி விட்டான்.
'ஊரில இருக்கற சாமியோட சக்தியெல்லாம் இங்க இந்த ஆத்தா கிட்ட இப்ப வந்திருச்சு! டேய் எல்லாம் எனக்குப் படையல் வயுங்கடா. இங்க பெரிசா கோயில் எழுப்பணுமடா' என்று சாமியாடிக் கூட்டம் சேர்க்க ஆரம்பித்தான். குறி சொல்லி எல்லோர் குறையும் தீர்க்கிறேன், காணிக்கையோடு வாருங்கள் என்று அவன் அழைப்பதைக் கேட்டு மூட பக்தர்களின் பெருங்கூட்டம் திரண்டது.
வலக்கைக்கு ஆத்திரம் கரை புரண்டோடியது. ஊர்க்கோயிலில் வருமானம் குறைந்ததால் அவனுக்குத் தாங்க முடியவில்லை.
'வாங்கடா இந்த புதுப்பூசாரிய இன்னிக்கு ரெண்டில ஒண்ணு பாத்திறுவோம் வாங்கடா' என்று படை திரட்டினான்.
முனைவர் ஆர்ம்ஸ்ட்ராங் அருளப்பா மட்டும் இதற்கு ஆட்சேபித்தார். 'நலிந்து வரும் நாட்டார் மரபியல்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து சமீபத்தில் முனைவர் பட்டம் வாங்கியவர் அவர். அவர் சார்ந்திருந்த அமைப்பு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து அவரை ஊர் ஊராகப் பிரச்சாரத்திற்கு அனுப்பிக் கொண்டிருந்தது. நேற்று கூட உள்ளூர் சிவன் கோயில் வாயிலில், பகுத்தறிவாளர் பாசறை அமைத்துக் கொடுத்த மேடையில் 'நடுகல் வழிபாடே தமிழர் வழிபாடு' என்ற தலைப்பில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒண்ட வந்து, தமிழரின் தொல்வழிபாட்டு மரபுகளைக் கபளீகரம் செய்த பார்ப்பனக் கூட்டத்தை சாடிப் பேசியதை, அதை வலக்கையே பாராட்டிப் பேசியதை அவர் நினைவூட்டினார். அவர் தொலைநோக்குடன் செய்து வரும் பரப்புரைகளுக்கு இந்த வலக்கை ஒரே நாளில் வேட்டு வைத்து விடுவான் போலிருக்கிறதே.
''அண்ணே! அங்க என்ன பாப்பானா மணியாட்டுறான் நம்ம ஆள்தான அண்ணே விட்றுங்க அண்ணே" என்று பக்குவமாய்ச் சொல்லிப் பார்த்தார்.
"இதுக்குதான் படிச்சவனயெல்லாம் கிட்டசேக்கக் கூடாதுன்னு சொல்றது" என்று வலக்கை சீறி விழுந்தான்.
"யோவ்! ஏதாச்சும் வாய்ல வந்து சொல்லப் போறன்யா. ரெண்டாயிரம் வருசம் கதையெல்லாம் இப்ப எதுக்குய்யா? இப்ப இன்னா அத்தப்பாரு. உள்ளூரு வெளியூருன்னு எம்மா சனம் அங்க இப்ப அம்முது பாத்தியா? உண்டி மட்டும் ஒரு நாளைக்கு ரெண்டுதரம் ரொம்புதான்யா. நம்ம இன்னா இளிச்சவாயனுங்களா? இங்க இன்னாடான்னா நம்ம கோயில்ல பாவம் அய்யிரு தட்ல கூட பத்து ரூவா சேர மாட்டேங்குதுன்னு அழுதுட்டாருய்யா நேத்து. உனுக்குப் பிடிக்கலன்னா எதிரொலிய கேட்டுப்பிட்டு பித்து பிடிச்சாப்புல உக்காந்திருக்காரே தலிவரு, அவரு கூட போய் உக்காந்துக்க போ!"
வலக்கை தன் சுயநலத்திற்காகக் கோயில் பார்ப்பனருக்கே பரிந்து பேசுவான் என்று அருளப்பா எதிர்பார்க்கவில்லை. பேசாமல் இடத்தைக் காலி செய்தார்.
"அதே கல்லு கிட்ட இன்னிக்கு நான் கேள்வி கேக்கப் போறன். ஏதாச்சும் உட்டாலக்கடி வித்தை காட்ட சாமியாரும் இப்ப பக்கத்தில இல்ல. மவனே அதுலயிருந்து இன்னிக்குப் பதில் வரலயின்னா, எப்டி வரும், வராது, அப்புறம் அந்த கல்லையும் உடச்சுப் போட்டுட்டு அந்த பேமானி மண்டையும் பொளந்துட்டு வரலாம் வாங்கடா!"
பெரிய கடப்பாறை ஒன்றை எடுத்துக் கொண்டு நாத்திகர் கூட்டம் புடைசூழப் புறப்பட்டான் வலக்கை.
தலைவர் மோனத்தில் ஆழ்ந்திருந்தார். இதற்கு மேல் சிந்திப்பதே கஷ்டமாய் இருக்கிறதே சாமியாரே என்று சொல்லிக் கொண்டே அமர்ந்திருந்தவர் மெதுவாய் எதுவுமே யோசிக்காமல் மனதை அலைபாய விடாமல் எங்கிருந்து இந்தச் சிந்தனை எல்லாம் உதிக்கிறது என்று உற்றுக் கவனிக்கத் தொடங்கினார்.
அவர் சிந்தனை உள்முகமாய்க் குவிந்து நின்று போன ஒரு கணத்தில் அவருள் அந்த அதிசய மாற்றம் நிகழ்ந்தது. அவர் திடீரென்று ஓர் ஒளிக்கடலில் வெடித்துக் கலந்தார்.
விவரிக்க இயலாத அந்த ஆனந்தப் பெருக்கில் விம்மி விம்மி அழுதார் தலைவர். அவர் சிறுமைகள் யாவும் கண்ணீரில் கரைந்தன. கருணையைத் தவிர வேறொன்றும் அங்கில்லை. அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்து நிற்கும் அந்த ஆனந்த ஜோதியில், 'நான்' என்ற அடையாளம் கொண்ட ஒரு துளி கரைந்து போனது. தன் வீடும் மனைவியும், மக்களும், ஊரும், மலையும், அருவியும், ஆறும் யாவும் பிணைத்து நிற்கும் சக்தி வெள்ளத்தில் கரைந்து தாமாகி நிற்பதைக் கண்டார்.
ஊர் மக்களைக் காணும் இச்சை வர அந்த ஒளிவெள்ளமே அவரை மலையடிவாரத்தை நோக்கி நகர்த்தியது.
வலக்கை கையில் கடப்பாறையுடன் அந்தக் கல்லின் முன் நின்று உரத்து சண்டை போட்டிருந்தான். புதுப்பூசாரியும் ஆவேசம் வந்தது போல் ஆடிக்
கொண்டிருந்தான்.
"டேய், ஆத்தா குடியிருக்கிற கல்லு மேலய கை வெச்சுடுவியா நீ? வெய்யிடா பாக்கலாம்! ராத்திரிக்குள்ள நீ ரத்தம் கக்குல நான் ஆத்தா இல்லடா!"
"டேய் அடங்குடா! இப்ப நான் இன்னா கேட்டேன்? ஒன் ஆத்தாவுக்கு உண்மைலய சக்தி இருந்துச்சுன்னா நான் கேக்கற கேள்விக்குப் பதில் சொல்லட்டுமடா. இல்லாட்டி இதை கண்டிப்பா ஒடப்பேன்" என்று கடப்பாறை தூக்கி நின்றான் வலக்கை.
"கேள்டா! என்னா வேணும்னாலும் கேளு! ஆத்தா வந்து பதில் நிச்சயம் சொல்வாடா! ஆனா என் மூலம் சொல்வாடா" என்றான் ஆவேசத்திலிருந்த புதுப்பூசாரி.
"இந்த தில்லாலங்கடி வேலையெல்லாம் நம்ம கிட்ட வேணாம் கண்ணு. எனக்கு இந்தக் கல்லுதான் இப்ப பதில் சொல்லணும்" என்ற வலக்கை ஊர் மக்களை அமைதியாக நிற்கும்படிச் சொல்லிவிட்டு தலைவர் நின்று கேள்வி கேட்ட இடத்தில் வந்து நின்றான்.
எங்கும் நிசப்தம்.
தலைவரைப் பார்த்தே பேசக் கற்றவன் அவன்.
உரத்த குரலில் கல்லைப் பார்த்துக் கேட்டான்.
"யார் நீ எங்கிருக்கிறாய்?"
இம்முறை ஊர்மக்கள் அனைவருக்கும் கேட்கும்படி பதில் வந்தது.
"யார் நீ எங்கிருக்கிறாய்?"
ஆனால் ஆத்தா குரலில் அல்ல,
- தலைவர் குரலில்.
(நிறைந்தது)
நன்றி:
இணைய நண்பர்கள், மற்றும் ஒத்த சிந்தனை உடையவர்கள்.
14 comments:
தலீவா, பின் நவீனத்துவம் ஓவரா இருக்கே.
என்னை மாதிரி தற்குறிகளுக்கு ஒன்னுமே புரியலையே.
இப்ப என்னா சொல்றே கலீஞர் புட்டபர்த்திக்கு போவார்ன்னா?
பெரியாரிசமும் அதன் மெஜாரிடேரியன் fascism ம் பின்நவீனத்துவம் பார்வை கொண்டு பார்க்க ஆரம்பிப்போமே! for a change!
ஒண்ணுமே புரியல உலகத்திலே.
என்னாப்பா, உளன் எனில் உளன் இல்லா,,,,, அப்படி எதுனா சாதரனமா சொன்னாலே சண்டை வருமோ. எத்தனை பேரு இதனை சாதாரண பதிவா பார்ப்பவர்கள் போய் சாமி கும்பிடலாம், கடவுளையும் கணிணீ மாதிரி material la காண்பிக்க சொல்லுரவுங்க கரண்ட கம்பிய போய் பிடிக்கலாம் கரண்ட பார்க்குறதுக்கு
http://www.youtube.com/v/G78n_N9eBkw
//
கரண்ட கம்பிய போய் பிடிக்கலாம் கரண்ட பார்க்குறதுக்கு
//
பகுத்தறிவு என்றால் இது தானோ ?
Great Story
அண்ணா, உள்குத்து எதுவும் இருந்தா ரொம்ப புரியலை. இந்த கதை சொல்ல வர விஷயமும் அடியேனுக்கு ரொம்ப தூரம். ஆனா எழுத்து நடை அமர்க்களம். நல்ல நிதானமா ஆர்பாட்டமில்லாத ஒரு நதியை பாலத்தில் அமர்ந்து பார்த்தது போல ஒரு உணர்வு.
அம்புட்டுதாங்கண்ணா.
ஓஷோவின் பாதிப்பு தெரிகிறது. இதேபோல் ஒரு கதையை அவரின் 'Liberation - Here & Now' என்ற புத்தகத்தில் படித்த ஞாபகம்.
//
நல்ல கதை. நீங்கள் எழுதியதா?
//
என்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகர்க்கு.
இந்தக்கதையின் முதல் பகுதியே (அதாவது நட்ட கல் முன்னின்று தலைவர் கேட்க்கும் கேள்வியுடன் முடியும்) பழைய கோகுலம் இதழில் வெளிவந்தது.
பின்னர் வரும் பகுதிகள் ஒரு இணைய நண்பர் அனானியுடனான உரையாடலின் விளைவு. ஆக இதில் என் பங்கு என்பது ரொம்பச் சின்னது...
வழக்கமாய் இப்படி ஒரு கதை வந்தால் எதிர்வினையாய் பத்து கதைகளாவது வருமே! இன்னும் காணவில்லையே!
எப்படி வரும்? இந்தக்கதையில் நாத்திகர்களுக்கு மட்டுமில்லாமல் ஆத்திகர் என்று வேடம் போடுபவர்களுக்கும் சேர்த்தே ஆப்பு வைத்திருக்கிறாரே. :-)
ஜானி ஜான்
Really fantastic story. Nice in all aspects. I already read ur Tamil version of "Trial Of Adi Shankara" & I astonished. I don't dare to comment even for that.
Also, regarding "Nattar Theyvangal", have u read Jeyamohan's "Maadan Mootcham". If u have not i recommend u the story. Let me know ur comments on it.
Good work once again. Expecting alot like this along with biophysics & others.
Continue doing this
Hari V
வஜ்ரா,
அருமையான கதை.
உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வுருவுகள்
என்ற நம்மாழ்வாரின் தத்துவ சாரத்தை, பின் நவீனத்துவ ஒயினில் கலந்து, அருமையான அரசியல் punch அவியல் வைத்துப் பரிமாறியிருக்கிறீர்கள். அற்புதம்!
Post a Comment