February 24, 2007

யார் நீ ? எங்கிருக்கிறாய் ?

அந்த ஊரின் பெயர் அழகாபுரி. பெயருக்கேற்ப மிக அழகான ஊரது. இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலுமாய் வளம் செழிக்க மக்கள் குறையொன்றும் இல்லாமல் வாழ்ந்திருந்தனர்.

இயற்கை குறை வைக்காவிட்டாலும் மனிதன் எதையாவது உருவாக்கிக் கொள்வது வழக்கம் அல்லவா? அந்த ஊரிலும் அப்படி ஓர் அக்கப்போர் உருவாகி, கொஞ்சம் கொஞ்சமாய் மக்களிடையே ஒற்றுமை குலைந்தது.

ஆத்திகவாதிகள், நாத்திகவாதிகள் என்று இரு குழுக்கள் ஏற்பட்டு அந்த ஊரின் நிம்மதி பறி போனது. இரண்டு பக்கங்களிலும் மூடர்களும், அயோக்கியர்களும், சிந்தனாவாதிகளும் இருந்தனர். ஆத்திகக் கோஷ்டியில் இருந்த மூடர்களால் மக்களுக்கு நன்மையும் கிடையாது, தீமையும் கிடையாது. அயோக்கியர்கள் சுயநலவாதிகளாய் இருந்தனரே ஒழிய அவர்களாலும் பெரிய தீங்கு மக்களுக்கு இல்லை.

ஆனால் நாத்திகக் கோஷ்டியில் இருந்த மூடர்களும் அயோக்கியர்களும் சும்மா இருக்காமல் ஊரை அடிக்கடி கலகப்படுத்திக் கொண்டிருந்தனர். அவர்கள் கோஷ்டியைச் சேர்ந்த சிந்தனாவாதிகளும் பல நூதனமான கருத்தாக்கங்களை உண்டாக்கிக் கலகம் விளைவிக்கக் காரணங்களை ஏற்படுத்திக் கொடுத்திருந்தனர்.

ஆனால் பெருவாரி ஆத்திக மக்கள் அவர்கள் பக்கம் கூட போவது கிடையாது. அவர்களை ஆத்திகர்களாக மாற்ற முயற்சி செய்யவும் இல்லை. ஆனாலும் நாத்திகர்கள் தாங்களாகவே ஓர் எதிரியைக் கற்பித்துக் கொண்டு ரகளை செய்து வந்தனர். நாளுக்கு நாள் இவர்கள் அட்டகாசம் அதிகமாகி வந்தது.

அதற்கும் ஒரு காரணம் இருந்தது.
அந்த ஊரின் தலைவர் இந்த நாத்திகவாதிகளின் அட்டகாசங்களின் மூலம் பதவியைப் பிடித்தவர். ஆதலால் இவர்கள் என்ன குற்றம் செய்தாலும் காணாதது போல இருந்து விடுவார்.

'கடவுள் என்று ஒருவர் இருந்தால் அது நாங்கள்தான்' என்று கூறிக் கொண்டு மக்களை மிரட்டத் தொடங்கினர் நாத்திகர்கள். தலைவர் உதவியால் கோவில் நிர்வாகிகளாகவும் மற்றும் கோவில் சம்பந்தமான பொதுநிதியைப் பராமரிக்கும் குழுவிலும் அவர்கள் ஊடுருவி இருந்தனர். ஆண்டவனுக்கு எதற்கு செல்வம், ஏழைகளுக்கு அதைப் பங்கிட்டுக் கொடுப்போம் என்று சொல்லிச் சொல்லி மக்களை ஏமாற்றித் தாங்கள் செல்வந்தர்களாக மாறி வந்தார்கள். திருவிழாக்களில் பெண்கள் கூட்டத்தில் புகுந்து அவர்களை மானபங்கப் படுத்திவிட்டு 'ஆண்டவன் வந்து உங்களைக் காப்பாற்றுவான் பாருங்கள்' என்று கேலியும் பேசினர்.

ஆத்திகர்கர்களோ, ஆண்டவன் உண்மையிலேயே ஏதாவது அவதாரம் செய்து தங்களைக் காப்பாற்ற வரமாட்டானா என்று ஏங்கி வேண்ட ஆரம்பித்தார்கள்.

அவர்கள் வேண்டுகோளுக்குச் செவிசாய்த்தாற்போல் அந்த ஊருக்கு ஒரு சித்தர் வந்து சேர்ந்தார். ஆத்திகர்கள் அவரைத் தங்கள் துன்பம் துடைக்க ஆண்டவனே நேரில் வந்ததாய்க் கருதினர். எல்லோரும் அவரிடம் நாத்திகக் கோஷ்டியின் அட்டகாசத்தை எல்லாம் ஒரு பாட்டம் சொல்லி அழுதனர். அற்புதம் ஏதாவது நிகழ்த்தியாவது தங்களைக் காக்க வேண்டினர்.

அந்தச் சித்தர் சிரித்தார்.

'நாத்திகக் கோஷ்டியில் இருக்கும் உண்மையான அறிஞர்களையும் சிந்தனையாளரையும் வாதத்தால் திருத்திவிட முயற்சி செய்கிறேன். அற்புதங்கள் நிகழ்த்த வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அயோக்கியர்களைத் திருத்துகிற அளவுக்கு எனக்குச் சக்தி இல்லை. பார்ப்போம். நீங்கள் போய் அவர்களை அழைத்து வாருங்கள்' என்றார்.

நாத்திகர் பக்கமிருந்து அறிஞர்களும் சிந்தனையாளரும், இந்தச் சித்தரை வாதத்தில் வென்று அவரை இந்த ஊரை விட்டே துரத்துவோம் என்ற ஆவலில் வாதம் செய்ய முன்வந்தனர்.

மலையடிவாரத்திலுள்ள குகை ஒன்றின் வாசலில் கூட்டம் நடந்தது. தன்னைப் பெரிய சிந்தனையாளனாகக் காட்டிக் கொண்ட தலைவரும் கலந்து கொண்டார். வாதப் பிரதிவாதங்கள் நிகழ்ந்தன. நாத்திகக் கோஷ்டியின் பல விதண்டாவாதங்களுக்கு மிகப் பொறுமையாய் பதில் அளித்தார் சித்தர்.

நேரம் போகப்போக விதண்டாவாதம்தான் வளர்ந்ததே ஒழிய நாத்திகர் தரப்பு எதையும் ஏற்பதாயில்லை. கடவுளையும் அவருடைய சக்தியையும் நேரில் கண்டால்தான் அடங்குவார்கள் போலத் தோன்றியது.

சித்தரும் கடைசியில் ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவர்போல் குகை வாயிலில் ஒரு கல்லை நட்டு ஏதோ ஒரு மந்திரத்தை உச்சாரணம் செய்து இதுதான் கடவுள் என்று சொல்லி நாத்திகவாதிகளின் கேள்விகளுக்குக் கடவுளே இனி பதில் சொல்வார் என்றார்.

நாத்திகவாதிகள் சிரித்தனர். கல் எப்படித் தங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் என்று கேலி பேசினர். சிலர் சித்தரைத் திட்டவும் செய்தனர், தங்களைக் கேவலப் படுத்துகிறார் என்று. ஆனாலும் ஒரே ஒரு கேள்வி கேட்போம் என்று தலைவர் சம்மதிக்க, அதற்குப் பதில் வராவிட்டால் சித்தர் ஊரை விட்டே போய்விட வேண்டும் என்று நிபந்தனையும் விதித்தனர்.

சித்தர் சம்மதம் என்றார்.

நல்ல குரல்வளம் கொண்ட தலைவர், நாத்திகர் தரப்பிலிருந்து கேள்வி கேட்க முன்வந்தார்.

எங்கும் நிசப்தம்.

தலைவர் கல்லின் முன்னால் போய் நின்று உரக்கக் கேட்டார்.

'யார் நீ எங்கிருக்கிறாய்?'



யாரும் எதிர்பார்க்காத வகையில் கல்லிடமிருந்து பதில் வந்தது. அதுவும் ஒரு கேள்வியாக.

'யார் நீ எங்கிருக்கிறாய்?'

அது கடவுளே கேட்டாரா அல்லது வெறும் எதிரொலியா என்று யாருக்கும் புரியவில்லை. தலைவரின் அல்லக்கைகள் இது ஏமாற்று வேலை என்று கூவ ஆரம்பித்தன. ஆனால் தலைவர் மட்டும் சற்று அயர்ந்து போயிருந்தார். அவரிடம் ஏதோ ஒரு மாற்றம் தெரிந்தது. அமைதியாய் நின்றிருந்தார். அருகிலிருந்து
கேட்ட அவர் காதுகளில், ஒலித்த குரல் சித்தர் குரல் போலவும் தோன்றியது.

திரும்பிப் பார்த்தார்.

பின்னால் தொலைவில் அவர் கண்மூடிக் கைகூப்பி நின்றிருப்பது தெரிந்தது.

கண்திறந்த அந்தச் சித்தர் தலைவரை அருகில் அழைத்து அவர் தோள்மேல் கைபோட்டு குகைக்குள் அழைத்துப் போனார்.

'வா என் செல்லமே!' என்று அவர் வாஞ்சையாய் அழைத்தது தந்தையையே பார்த்து வளர்ந்திராத தலைவருக்கு இன்னதென்று விவரிக்க இயலாத ஒரு நெகிழ்ச்சியைக் கொடுத்தது. கூடவே போனார். உள்ளே போனதும் அவரை அருகில் அமர்த்தி அந்தச் சித்தர் சொன்னார். 'குழந்தாய், கல்லின் மூலம் கடவுள் எப்படிப் பேசினார், அது என் குரலா, கடவுளின் குரலா, அல்லது வெறும் எதிரொலியா என்று ஆராய்ச்சி செய்யாதே. அது வீண்வேலை. ஆனால் திருப்பிக் கேட்ட அந்தக் கேள்வியை மட்டும் மனதில் வை!

உண்மையில் நீ யார் எங்கிருக்கிறாய் என்று தேடிக் கண்டுபிடி. கடவுளைச் சுலபமாய்க் கண்டுபிடிக்க அது ஒன்றே வழி' என்று சொல்லி, தலைவர் கையில் ஒரு பெரிய வெங்காயத்தைக் கொடுத்தார்.

ஏதோ வித்தை காட்டப் போகிறார் என்று எதிர்பார்த்திருந்த தலைவருக்கு ஆச்சரியம்.


தொடரும்..

8 comments:

Anonymous said...

Interesting. You keep me waiting. Raj

கால்கரி சிவா said...

இன்னா தலீவர் நாத்திகர் கருணாநிதியா? சித்தர் சாய் பாபாவா?

Hari said...

வஜ்ரா,
அழகாபுரி போன்ற குறியீடு எல்லாம் புரியுது. அந்த சித்தர் யாரு?

Anonymous said...

சங்கர் என்னப்பா இது ஒரே திகில் கதையா இருக்கு, சாமி காப்பாத்து என்னையும் இந்த சங்கரயும். அப்பாடா ஒரு வழியா கடைசியா மாட்டிடான். இதுக்கு வரும் பாரு பின்னூட்டம் பெரியார்ட்ட இருந்தும், பெரியவர்ட இருந்தும்.

Anonymous said...

'யார் நீ எங்கிருக்கிறாய்?'

இதைப் புரிந்து கொள்ள எனக்கும்
விருப்பம். நேரம் வரும் வரை
ஆண்டவன் பொறுமையைக் கொடுக்க
வேண்டும்.

Anonymous said...

சங்கர், இது என்னொவோ அந்த காட்டரபிகள் கூட்டம் முகமதுவ இறைதூதர் என்று ஒத்துக்கொள்ள முடியாம யூத மத குருமார்கள விட்டு புத்திசாலித்தனமான கேள்விகலெல்லாம் கேட்டு வாதத்தில வெற்றியடைச் சொல்லி ஒரு சாவல் விடுவாங்களே, (அப்படின்னு வரலாறு சொல்லுதே) அதுல இருந்து சுட்ட கதை மாதிரி தெரியுதே - 'one liner' ??.

VSK said...

பாலத்தில் அமர்ந்ந்தல்ல!

அமைதியான நதியில் அமிழ்ந்தது போல் ஒரு உணர்வு!

உன்னை உன்னுள்ளே கண்டு கொள்!

Anonymous said...

வஜ்ரா,
உங்கள் வலதுசாரி கருத்துகளுக்கு நான் எதிரானவன். அதற்காக இடதுசாரியும் இல்லை. இருந்தாலும் ஒரு முழுமையான ஜனநாயகத்தில் இருதரப்புக் கருத்துக்களும் இருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. நிற்க. உங்கள் தனிப்பட்ட கருத்துகள் எதுவாயிருந்தாலும் இந்தக்கதை நல்ல கதை. யோசிக்க வைக்கும் கதை.

சந்தடி சாக்கில் எஸ்கே அய்யாவிற்கு ஒரு கேள்வி. நீங்கள், ராகவன், குமரன் எல்லாம் எழுதும் ஆத்திக நம்பிக்கைகளுக்கும் இந்தக் கதைக்கும் என்ன சம்பந்தம்? நீங்கள் இங்கே பாராட்டிப் பின்னூட்டம் இட்டிருப்பதால் உங்களைக் கேட்கிறேன்.
என்றென்றும் அன்புடன்,
சபாபதி